திங்கள், 26 ஜூன், 2023

இயற்கைக்கு உயிரூட்டிய "நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை"


 


"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" வெறும் வாசகம் மட்டுமல்ல. அறிவியலின் உண்மை. உலகின் ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, வானம், ஆகாயம் இவைகள் அத்தனையும் மனித உயிரோடும், உடலோடும்   சம்பந்தப்பட்டவைகள். மனித உயிர் மட்டும் தான் மதிப்பு மிகுந்ததா??? மனித உயிருக்குப் பிறகு தான் மற்ற உயிர்கள் எல்லாம் இது தான் மனித உயிரின் மதிப்பு? மனித உயிருக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்ற விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் இருப்பதில்லை, ஏன் இந்த பாகுபாடு? சுயநலம் ஒருபுறம் இருக்க, விலங்குகளை காக்கவும் ஆங்காங்கே சங்கங்களும், சட்டங்களும் வந்துவிட்டன அதனால் மனித உயிரை அடுத்து விலங்குகளின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்பது அதனை அழிக்கும்போது தான் உணர்கிறோம். அதற்கும் வலி உண்டு, அதற்கும் இறப்பு உண்டு. மனிதன் அந்த தாவரத்தின் வலியும், இறப்பும் உணராததால் நமக்கு அது ஒரு வேடிக்கை. தாவரங்களும் உலகில் உள்ள ஐம்பூதங்களோடு சம்பந்தப்பட்டது தான். நிலத்தின் வேர் ஊன்றி, நீரினை உணவாக எடுத்து, ஆகாயத்தை எல்லையாகக் கொண்டு, காற்றினை உலகிற்கு கொடுத்து, சுட்டெரிக்கும் செஞ்சூரிய நெருப்பிலிருந்து சத்துக்களை ஈர்த்து வளர்கிறது. அதனால்தான் எத்தனை பலன்கள்!!

 மனிதன் உயிருடன் இருக்கும்போது மட்டுமே பயன்படுவான் இறந்தபின் பிணமாகத்தான் பார்க்கப்படுவான். ஆனால் தாவரமோ இருந்தாலும் பயன், இறந்தாலும் பயன் என்பதை உணர்ந்த பின்னும் மரங்களை அழிக்க நினைக்க காரணம் மனித இனத்தின் தேவை.

மனிதனின் தேவைக்கும் ஆசைக்கும் தான் எல்லை என்பதே கிடையாதே. மனித இனம் அதிகரிக்க அதிகரிக்க இருப்பதை அழித்து இடத்தை அபகரிப்பதே முன்னேற்றம் என்று கருதுகிறோம்.

அப்படி இன்றைய தேவைக்காக எத்தனை எத்தனை மரங்கள், தாவரங்கள், காடுகள், மலைகள் என்று இயற்கை வரங்களை அழிக்கிறார்கள் மனிதர்கள். நானும் மனிதன் தான் எனக்கும் இந்த பாவச்செயலில் பங்கு உண்டு ஆனாலும் அதனை காப்பது எப்படி? அடுத்த தலைமுறைக்கு செயற்கையை விட இயற்கையை உருவாக்குவது எப்படி என்று எண்ணுவது ஒரு சிலரே. அந்த சிலர் அந்த இயற்கை வளங்களை காப்பாற்ற போராடும் போராட்டம் அளவில்லாதது. எல்லா இடங்களிலும் அப்படி பட்ட சில மனிதர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் இன்றும் நாம் சுவாசிக்க இயற்கை உதவுகிறது.
 

இன்றைய சுயநல உலகில் மனிதனுக்கே உதவாத சில மனிதர்களுக்கு மத்தியில் மரம் ஒன்றை காக்க பல மணி நேரம் போராடி உயிர் கொடுத்த மரத்திற்கு மறு உயிர் கொடுக்கும் சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 200 ஆண்டு பழமையான மரம், எத்தனை பேருக்கு நிழல் கொடுத்திருக்கும், எவ்வளவு காற்று கொடுத்திருக்கும் அப்பப்பா எத்தனை தலைமுறைக்கு தாயாக இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவே கண்ணை சுற்றுகிறது. அப்படி பட்ட மரத்தை அழித்து நம் தேவைக்கு சாலை அமைக்க முற்பட்டவர்களுக்கு மத்தியில் அந்த மரத்தை  மற்றுமொரு இடத்தில் மறுநடவு செய்து உயிரூட்ட எண்ணி அதனை செய்தும் காட்டியவர்கள் தான் "நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை" நண்பர்கள். மிகவும் அரிதான இந்த செயல்களை செய்பவர்கள் வெகு சிலரே. அவர்களில் குறிப்பிடக்கூடியவர்கள் தான்  "நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை" அமைப்பினரும்.

"வாய்ச்சொல் எளிது
செயல் என்பது அவ்வளவு எளிதல்ல".

200 ஆண்டு பழமையான மரம், கிட்டத்தட்ட 40 டன் எடை ஓரிடத்திலுருந்து எடுத்து சென்று சில மைல் தாண்டி மற்றொரு இடத்தில் மறு நடவு செய்வது எளிதானதா?? அந்த கடினமான பணியை நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிகழ்த்தியுள்ளது. 

முன்னால் யார் செய்தார்கள், 

பின்னாளில் யார் செய்வார்கள் என்றெல்லாம் தெரியாது 

இந்நாள் நாங்கள் செய்வோம் என்று மிகப் பழமையான ஒரு மரத்திற்கு மறுநடவு செய்து உயிரூட்டிய சம்பவம் நம்ம திருச்செங்கோட்டில் "நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை" நண்பர்களால் சாத்தியமாகியுள்ளது.

ஒரு மணிநேர வேலை அல்ல இது, கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களை கொண்ட அமைப்பு அத்தனை பேரும் ஒரே இடத்தில் ஒரு நாள் முழுவதும் இரவு பகல் பாராமல், சுட்டெரிக்கும் வெயிலையும் பாராமல்,  தன்னை வருத்தி அந்த மரத்தை மறு நடவு செய்திருக்கிறார்கள். அன்றோடு அழியப்போன மரத்தை இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வழி செய்துள்ளார்கள். இது சமூக சேவை மட்டுமல்ல, சமூக கடமையாக இவ்வளவு பெரிய பணியை செய்திருப்பது பாராட்டிற்குறியது.
 
இன்று மட்டுமல்ல பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் சமூகப் பணி பெரும் பேசு பொருளாக இருந்தது குறிப்பிடதக்கது.
 

1.) ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மரம் வளர்க்கும் திட்டம், 


 

2.)நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் இரத்த வங்கி திட்டம்(2000க்கும் மேற்பட்ட இரத்த தேவையை பூர்த்தி செய்துள்ளார்கள்)


 

3.) நீர் நிலைகளை பாதுகாப்பது மற்றும் கட்டமைப்பு திட்டம்,


 

4.) கொரோனா சமயத்தில் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேலாக உணவில்லாமல் வாடியவருக்கு இலவச உணவு வழங்குதல் திட்டம் இன்னும் பல சமூக கடமைகளை தன் சொந்த கடமையாக எடுத்து செய்துவரும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையில் இந்த மரம் மறுநடவு திட்டமும் ஒன்று என்று கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி. 



 இயற்கையை உருவாக்க முடியவில்லை என்றாலும் அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நம்முடைய அடுத்த தலை முறை சுவாசிக்க காற்றும், குடிக்க நீரும் இயற்கையின் வழி உருவாகட்டும். 

"வாழ்க நம் சமூகம்

வளர்க சமூகப்பணி" 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...